Thursday 3 April 2014

Reason for offering Betel leaves in Hindu devotions

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.


வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர். பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கும், சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது. என்ன கொடுத்தாலும் வெற்றிலையும், பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

Source : http://temple.dinamalar.com/news_detail.php?id=29558

No comments:

Post a Comment